புதுச்சேரி தவில் கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. அவருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
இதில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு,67 பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் 52 ஆண்டுகால தவில் இசை சேவையை பாராட்டி இந்த விருதினை புதுச்சேரி அரசின் பரிந்துரை பேரில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவர், நாடு முழுதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். புதுச்சேரி அரசின் கலைமாமணி விருதினையும், அம்பேத்கர் நேஷனல் விருதினையும், அம்பேத்கர் கலாஸ்ரீ தேசிய விருதினையும் பெற்றுள்ளார்.பத்மஸ்ரீ விருது தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டதை அறிந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
No comments